
ஜார்ஜ்டவுன், ஜூலை-17-பினாங்கில், 2 ரிங்கிட் மதிப்பிலான ஒரு சாதாரண சீட்டு, அதிகாதி ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. அவ்வாடவர் மேக்னம் 4டி ஜாக்பாட் 1 மூலம் 8.17 மில்லியன் ரிங்கிட்டை வென்றுள்ளார்.
கணக்குத் துறை அதிகாரியான அவ்வாடவர், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த எண்களின் தொகுப்பு வெற்றிக்குரிய எண்களுடன் ஒத்துப் போனதால், அப்பெரும் தொகையை வென்றார்.
அந்த வெற்றி எண்கள் ஏதோ தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல. சீன ஜோதிடர் ஒருவரிடம் மனைவியும் சென்ற போது கிடைத்த ஆலோசனையின் பேரில் அவர் தனது மற்றும் மனைவியின் அடையாள அட்டைகளின் சில எண்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு குலுக்கலிலும் அதே எண்களைத் தொடர்ந்து எடுத்து வந்துள்ளார்.
அண்மையில் மேக்னம் செயலியில் சீட்டைச் சரி பார்த்த போது, பரிசுத் தொகையைக் கண்டு தாம் திக்கு முக்காடி விட்டதாக அந்நபர் பரவசத்துடன் கூறினார்.
திடீர் கோடீஸ்வரராக மாறியிருந்தாலும், தமது வேலையை விட்டு விடும் எண்ணம் ஏதுமில்லை. அதற்குப் பதிலாக, தனது கடன்களை அடைக்கவும், மனைவியுடன் விடுமுறையைக் கழிக்கவும் தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு தமது மனைவியை ஓய்வு பெற வைக்கவும் அவர் எண்ணியுள்ளார்.



