
கோலாலம்பூர், ஜூலை-23-Bersatu கட்சியைக் கலைத்து விட்டு, அதன் உறுப்பினர்கள் அம்னோவுக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை அக்கட்சித் தலைவர் Tan Sri Muhyiddin Yassin நிராகரித்திருக்கிறார். Bersatu கட்சி அதன் அரசியல் போராட்டத்திற்கான களமாகத் தொடரும் என்றும் அவர் ஆணித்தரமாகக் கூறினார்.
ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன் நிறுவப்பட்ட ஒரு கட்சியைக் கலைக்க எந்த நியாயமான அடிப்படையும் இல்லை. Bersatu ஏன் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில், Bersatu ஓர் அர்த்தமிக்கப் பயணத்தை மேற்கொண்டு வருகிறது. அது குறுகிய காலத்தில் தோன்றி திடீரென மறைந்து போன கட்சி அல்ல என Muhyiddin விளக்கினார்.
Bersatu கட்சியைக் கலைக்க வேண்டும் என்ற அம்னோ கட்சியின் மூத்த தலைவர் Tan Sri Mohamad Yusoff Latiff பரிந்துரை செய்ததற்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
அம்னோ ஏற்கனவே பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. நான் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டேன். அதன் பின்னர்தான் Bersatuவை அமைத்து வழிநடத்தி வருகிறேன். அப்படியிருக்க, நான் ஏன் அம்னோவிற்குத் திரும்ப வேண்டும் என Muhyiddin வினவினார்.
இன்று, எங்களிடம் 5,000 கிளைகளும், சுமார் 5 லட்சம் உறுப்பினர்களும், 180 பிரிவுகளும் உள்ளன. இனம், மதம் மற்றும் நாட்டிற்கான போராட்டத்தைத் தொடரவே Bersatu நிறுவப்பட்டதாகவும், எனவே மற்றவர்கள் கோரிக்கை விடுப்பதற்காக மட்டும் கட்சியைக் கலைக்க முடியாது என்றும் அந்த முன்னாள் பிரதமர் சூளுரைத்தார்.
16-வது பொதுத் தேர்தலுக்கு முன் மலாய் அரசியலை ஒருங்கிணைக்கும் நோக்கில், Bersatu கட்சியைக் கலைத்து விட்டு அம்னோவில் மீண்டும் இணையுமாறு Yussof அக்கட்சி உறுப்பினர்களை முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
Perikatan Nasional கூட்டணியில் பாஸ் கட்சியுடனான உறவு முறிந்ததைத் தொடர்ந்து, Bersatu முக்கிய அரசியல் நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு வருவதாக Yussof மேலும் குறிப்பிட்டிருந்தார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் Barisan Nasional கூட்டணி 48 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், Bersatu கட்சியால் ஓர் இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. அக்கட்சியின் அரசியல் செல்வாக்கு சரிந்து வருவதையே இது காட்டுகிறது என்றும் Yussof சுட்டிக் காட்டியிருந்தார்.



