
கலிஃபோர்னியா, ஜூலை-26-Android 6.0 Marshmallow இயங்குதளத்தை பயன்படுத்தும் விவேகக் கைப்பேசிகளுக்கு, Play Services ஆதரவை கூகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.
பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நவீன Android அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டு, புதிய Android பதிப்புக்கு மேம்படுத்தப்படாத சில பழைய விவேகக் கைப்பேசிகளில், Google Play Store மூலம் புதிய செயலிகள் மற்றும் விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்வதிலும், ஏற்கனவே உள்ள செயலிகளைப் புதுப்பிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.
ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள செயலிகள் உடனடியாக செயலிழக்காது.
என்றாலும், காலப்போக்கில் பாதுகாப்பு புதுப்பிப்புகள் கிடைக்காமல் போகலாம்.
மேலும், புதிய செயலிகள் மற்றும் அம்சங்களுக்கான ஆதரவும் குறையக்கூடும்.
எனவே, Android 6.0 Marshmallow பயன்படுத்தும் பயனர்கள், தங்களது தொலைபேசியில் புதிய மென்பொருள் புதுப்பிப்பு கிடைக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும், தேவையெனில் புதிய சாதனத்திற்கு மாறுவதையும் பரிசீலிக்குமாறு தொழில்நுட்ப நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



