
கோலாலம்பூர், ஜூலை.30- நாட்டிலுள்ள மலைகளை ஏறி துணிகரப் பயணத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர் லோகசந்திரன் ராமசந்திரன் மீண்டும் ஒரு சாதனையைப் பதிவு செய்யத் தயாராகி விட்டார். கடந்தாண்டு 7 நாட்களில் 9 மலைகளை ஏறி அவர் மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம் பிடித்தார். இம்முறை, நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, 7 மாநிலங்களில், 7 நாட்களில் 12 மலைகளை ஏற அவர் திட்டமிட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஜோகூரின் Gunung Ledang மலையில் தொடங்கும் லோகசந்திரனின் பயணம் 31 ஆம் தேதி இறுதியாக பேராக், Gunung Kerunai-யில் முடிவுக்கு வரும். அது சுமார் 60–70 மணி நேரம் மொத்த நடைபயணத்தை உட்படுத்தியிருக்கிறது.
முந்தைய மலேசிய சாதனைக்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்புக் கிடைத்ததாகக் கூறிய லோகசந்திரன், பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் கூட தம்மைத் தொடர்பு கொண்டு தன்முனைப்புப் பேச்சுக்கு அழைத்தாகக் கூறுகிறார்.
பொழுதுபோக்காகத் தொடங்கியதில் தீவிரம் காட்டினாலும், வேலை – மலையேறுதல் என இரண்டுக்கும் இடையில் சமச்சீரான நேரத்தை இவர் ஒதுக்கிக் கொள்கிறார். மலேசியர்கள் அனைவரும் முதல் முயற்சிக்கு கொடுத்த அதே வற்றாத ஆதரவை, இந்த இரண்டாவது மலேசிய சாதனை முயற்சிக்கும் வழங்குவார்கள் என லோகசந்திரன் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
கோவிட் காலத்தில் பொழுதுபோக்காக தொடங்கிய இவரது முயற்சி, மலேசியாவின் இயற்கை அழகையும், மலைப் பாரம்பரியத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்துவதோடு, இளைஞர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், சாகசத்திற்கும் ஊக்குவிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட லோகசந்திரனின் இந்த சாதனை முயற்சிக்கு துணை நிற்க வேண்டியது நமது கடமையாகும்.
எனவே, ராமசந்திரனின் இந்த முயற்சிக்கு உதவ விரும்புபவர்கள் அவரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.



