
கோலாலம்பூர், ஆகஸ்ட்.04-கேஷ்வின் நாயர் எனும் சிறுவன் வெறும் நான்கு வயதிலேயே கார் இயந்திர உதிரிபாகங்களை அடையாளம் கண்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysia Book of Records) தேசிய சாதனையாளராக பெயர் பதித்துள்ளார். “ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையிலான கார் இயந்திர உதிரிபாகங்களை அடையாளம் கண்ட சிறுவன்” என்ற பிரிவில், ஒரு நிமிடத்தில் 44 வெவ்வேறு கார் இயந்திர உதிரிபாகங்களைச் சரியாகக் கண்டறிந்து இவர் இச்சாதனையைப் படைத்துள்ளார்.
கேஷ்வின் இரண்டு வயதிலிருந்தே கார்கள் மற்றும் அவற்றின் இயந்திரங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வந்ததாக அச்சிறுவனின் தந்தை தினாலன் மோகன் தாஸ் தெரிவித்தார். சில முறை பார்த்தாலே உதிரிபாகங்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கூறும் திறன் கேஷ்வினுக்கு இருந்த நிலையில், அதனை ஊக்குவித்து வந்த தாம், தமது மகனின் ஆர்வம் ஒருநாள் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என்கிறார் வாகனத் துறையில் நிபுணரான தினாலன்.
சாதனை முயற்சிக்கு அனுமதி கிடைத்த பின், கேஷ்வினின் தாயார் காயத்ரி நாயர் விளக்கக் காட்சிகள் மூலம் பயிற்சி அளித்துள்ளார். தந்தை தினாலன் உண்மையான கார் இயந்திர உதிரிபாகங்களைப் பயன்படுத்தி பயிற்சி வழங்கியுள்ளார். கேஷ்வின் எதிர்காலத்தில் மேலும் ஒரு மலேசிய சாதனையைப் படைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமான திறமைகள் உள்ளன. அவர்கள் இயல்பாக ஆர்வம் காட்டும் துறையை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். பொறுமை, அன்பு மற்றும் நேர்மறையான ஊக்குவிப்பு கிடைத்தால், குழந்தைகள் அசாதாரண சாதனைகளையும் நிகழ்த்த முடியும் என தினாலன் குறிப்பிட்டார்.



