
கோலாலம்பூர், செப்-23-MANDIRI DEVELOPMENT CENTRE Sdn Bhd எனும் அரசு சாரா அமைப்பு தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதே சமயம் அவ்வமைப்பின் இரு இயக்குநர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நேற்று அழைக்கப்பட்ட அவ்விருரும் அந்த நடைமுறை முடிந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
புக்கிட் அமான் காவல்துறைத் தலைவர் செயலகத்தின் கீழுள்ள பணமோசடி தடுப்பு குற்றவியல் புலனாய்வுக் குழுவினர், நேற்று பிற்பகல் 3.53 மணியளவில் இருவரையும் கைது செய்ததாக தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Mohd Khalid Ismail தெரிவித்தார். 2001 ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட வருமானம் தொடர்பான சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உதவ அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்நிறுவனம் 2024 முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நிதியை வாங்கியது தொடர்பான புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 10ஆம் தேதி விசாரணை தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.
சந்தேகத்திற்குரிய வகையிலான நிதியை வைத்திருத்தது, பரிமாற்றம் செய்தது, பயன்படுத்தியது, வங்கிக் கணக்குகளில் செலுத்தியது, பணத்தை எடுத்தது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தப்படவிருக்கிறது. அச்சட்டவிரோதச் செயல்களில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அனைத்து தரப்பினரும் சட்டத்திற்கு உட்பட்டு விசாரிக்கப்படுவர் என Mohd Khalid Ismail தெரிவித்தார். ஊகங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி விசாரணைகளுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.



