
சென்னை, ஆகஸ்ட்-5,காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பிரபல நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நேற்று காலை கைதான எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், விசாரணைக்கு பின் இரவில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
TVK மகளிர் அணி அளித்த புகாரின் பேரில், பெண்களை இழிவுபடுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் போலீஸாரால் சென்னையில் கைதுச் செய்யப்பட்ட உதயநிதி, பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
அவர் கைதான விஷயம் பரவியதும் தமிழகத்தில் பரவலாக திமுக தொண்டர்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரை விடுவிக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில், நேற்றிரவு போலீஸ் நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள், உதயநிதி வெளியே வந்ததும் முழக்கங்களை எழுப்பியும், கட்சி கொடிகளை அசைத்தும் பூக்களைத் தூவியும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விடுதலையான பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், இது ஆளும் கட்சியின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், விவசாயிகளின் பிரச்னையை திசைதிருப்பவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, தஞ்சாவூரில் நடந்த காவிரி நீர் பங்கீடு போராட்டத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த வேளையில் கூட்டத்தில் இருந்த சிலர் நடிகை திரிஷாவின் பெயரை கூச்சலிட்டனர்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக உதயநிதி பேசிய கருத்து, முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை திரிஷாவை இணைத்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக விமர்சனம் எழுந்தது.
பல அரசியல் தலைவர்களும் உதயநிதியின் பேச்சைக் கண்டித்தனர்.
பதிலுக்கு TVK சார்பில் உதயநிதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால், அவர் பேசியப் பேசியதாகக் கூறப்படும் பேச்சை விட, கைது நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக அரசியலில் காலங்காலமாக என்னதான் ஆளுங்கட்சி எதிர்கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டாலும், அவதூறு வழக்கிற்காக கைதுச் செய்யப்படுவது மிக மிக அரிதாகும்.



