
புது டெல்லி, ஆகஸ்ட்-6-புது டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயிலில், கைவிடப்பட்ட பயணப் பெட்டிக்குள் வெட்டப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை Agra Cantt இரயில் நிலையத்தில் அதிகாலை 5.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
வழியில், இரயிலின் பின் பகுதி பொதுப் பெட்டியில் கைவிடப்பட்ட ட்ரோலி பையில் இருந்து துர்நாற்றமும், இரத்தக் கசிவும் வெளியேறுவதை பயணிகள் கவனித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இரயில் ஆக்ரா வந்தடைந்ததும், இரயில்வே போலீஸாரும், இரயில் பாதுகாப்புப் படையினரும் சோதனையிட்டு அந்த சூட்கேஸைக் கைப்பற்றினர்.
அதிலிருந்த உடல் பாகங்கள் சவப் பரிசோதனை மற்றும் DNA பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அந்தப் பயணப் பெட்டிக்குள் இருந்த பேக்கிங் பொருட்களில் சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் அடையாளங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
சூட்கேஸை இரயிலில் ஏற்றியவர் யார் என்பதைக் கண்டறிய, சிறப்பு இரயில்வே தனிப்படை, சென்னைப் போலீஸாருடன் இணைந்து காணாமல் போனவர்கள் பற்றிய புகார்கள் மற்றும் CCTV காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.



