
கூலிம், ஆகஸ்ட் 11 – கூலிம், தாமான் கெமுனிங்கில் நேற்று இரவு காய்கறி வெட்டும் கத்தியுடன் வந்த 33 வயது பெண், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரோடுவா மைவி காரின் பின்பக்க கண்ணாடி மற்றும் பின்புற விளக்குகளை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக இரவு 10.30 மணியளவில் 29 வயது தொழிற்சாலை ஊழியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பொதுமக்கள் சிலர் சம்பவத்தைப் பார்த்ததுடன், காணொளியும் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
கூலிம் மாவட்ட காவல்துறை விரைந்து சென்று அந்தப் பெண்ணைக் கைது செய்தது. விசாரணையில், அவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மனநல சிகிச்சை பெற்று வருவதுடன், கடந்த ஜூன் மாதமும் சிகிச்சைக்கு சென்றது தெரியவந்தது. தற்போது அவர் கூலிம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



