
இந்திய இளைஞர்கள் குற்றச்செயல்கள் மற்றும் குண்டர் கும்பல்களில் ஈடுபடுவதற்கு பெற்றோரின் வழிகாட்டுதல் இன்மை, வறுமை போன்ற காரணங்களை மட்டும் சுட்டிக்காட்டுவது, உண்மையான அடிப்படைப் பிரச்சினையை மறைப்பதாக உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் ப. இராமசாமி கூறியுள்ளார்.
இந்தியர்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் இனப் பாகுபாடு மற்றும் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான ஓரங்கட்டப்படுதலையும் இதன் முக்கியக் காரணங்களாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மக்கள் தொகையில் இந்தியர்கள் சிறுபான்மையினராக இருந்தபோதிலும், குற்றச்செயல்கள் மற்றும் குண்டர் கும்பல்களில் இந்திய இளைஞர்களின் ஈடுபாடு கவலைக்குரிய அளவில் இருப்பதை மறுக்க முடியாது என்றார்.
ஆனால், இதனை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக அணுகி, காவல்துறை நடவடிக்கைகள் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது என இராமசாமி தெரிவித்தார்.
அரசுத் துறையில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் உயர் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனியார் துறையிலும் இந்தியர்கள் பாகுபாடுகளை எதிர்கொள்வதாகக் கூறினார்.
இதுபோன்ற சூழலில் வாய்ப்புகள், வருமானம், சமூக அந்தஸ்து மற்றும் தங்களுக்கான ஓர் அடையாளத்தைத் தேடும் சில இளைஞர்கள், குற்ற வலையமைப்புகள் மற்றும் குண்டர் கும்பல்களால் ஈர்க்கப்படக்கூடிய சூழல் உருவாகிறது என்றார்.
இது குற்றச்செயல்களை நியாயப்படுத்துவதற்கான வாதம் அல்ல என்று தெளிவுபடுத்திய இராமசாமி, குற்றச்செயல்கள் சமூக வெற்றிடத்தில் உருவாவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
பெற்றோர்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதும், ஆசிரியர்கள் வழிகாட்டுவதும், காவல்துறை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.
ஆனால், அதனுடன் இந்திய சமூகத்தைப் பாதிக்கும் கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மை, வேலைவாய்ப்புப் பாகுபாடு மற்றும் பொருளாதார ஓரங்கட்டப்படுதலுக்கும் அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“இந்திய இளைஞர்களையும் பெற்றோர்களையும் மட்டும் குற்றம் சாட்டுவது பிரச்சினையின் அறிகுறிகளையே கையாளும்; இனப் பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்படுதல் என்ற உண்மையான நோய்க்கு தீர்வு காணப்பட வேண்டும்,” என ப. இராமசாமி தெரிவித்தார்.



