
ஆயர் குரோ, ஆகஸ்ட்-15,தாபோங் ஹஜி (Tabung Haji) நிதி முறைகேடு விவகாரமானது முஸ்லீம்களுக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல என்றும், அதன் சுமையை மலேசியாவில் உள்ள அனைத்து இன மக்களுமே சுமக்க வேண்டியுள்ளது என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலாக்கா, ஆயர் குரோவில் நடைபெற்ற பி.கே.ஆர் தேசிய மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவருமான அன்வார், பேராசையால் ஒரு சிலர் செய்த மோசடியால் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபான்கள் மற்றும் கடசான்கள் என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தாபோங் ஹஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையை பகிரங்கப்படுத்திய அமைச்சரவையின் முடிவை ஆதரித்துப் பேசிய அவர், இந்நிறுவனத்தில் அரசியல் தலையீடுகளைக் கட்டுப்படுத்தவும், கடுமையான தணிக்கைகளை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மற்றும் போலீஸ் போன்ற விசாரணை அமைப்புகள் எவ்வித சமரசமும் தாமதமும் இன்றி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், இதில் சம்பந்தப்பட்டவர்களின் பதவி, அரசியல் பின்னணி அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
அரசியல் வட்டாரம் மட்டுமின்றி பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாபோங் ஹஜி நிதி முறைகேடு தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



