
புத்ராஜெயா: தற்போதைய நாடாளுமன்றத் தவணை முடியும் வரை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கு DAP முடிவு செய்துள்ளது.
இன்று நடைபெற்ற கட்சியின் சிறப்பு மாநாட்டில், அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து பிரதிநிதிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் எண்ணப்பட்ட 2,099 வாக்குகளில், 88 விழுக்காடு அல்லது 1,857 பிரதிநிதிகள் DAP அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வாக்களித்தனர். அதேவேளையில், 242 பிரதிநிதிகள் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என வாக்களித்தனர்.
இந்த வாக்கெடுப்பு முடிவை நெகிரி செம்பிலான் DAP செயலாளர் சா கீ சின் (Cha Kee Cin) அறிவித்தார்.
இன்றைய சிறப்பு மாநாட்டில் மொத்தம் 2,223 பிரதிநிதிகள் பங்கேற்றதாகவும், இது மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்திருந்தவர்களில் 52.12 விழுக்காடு என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த முடிவைத் தொடர்ந்து, DAP-ஐ சேர்ந்த அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களில் பதவி வகிக்கும் கட்சிப் பிரதிநிதிகள் தங்களது பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள்.
தற்போது DAP சார்பில் ஐந்து பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ, டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர்.
மேலும், ஏழு பேர் துணை அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர்.



