
கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 – தாபுங் ஹஜி விவகாரத்தில் சில தனிநபர்கள் செய்த தவறுகளை ஒட்டுமொத்த மலாய் இனத்துடன் தொடர்புபடுத்தி விமர்சிப்பது நியாயமற்றது என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முஹமட் அக்மால் சாலே (Dr Muhammad Akmal Saleh ) தெரிவித்துள்ளார்.
திருட்டு என்பது இனத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், ஒவ்வொரு இனத்திலும் நல்லவர்களும் தவறு செய்பவர்களும் இருப்பதாகவும் அவர் கூறினார். எனவே, சில தனிநபர்களின் குற்றத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்தக் கூடாது என்றார்.
“தவறு செய்திருந்தால் கைது செய்து, விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்ட வேண்டும். யார் குற்றவாளி என்பதை சட்டமே தீர்மானிக்கட்டும்,” என அவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் வெறுமனே குற்றச்சாட்டுகளை முன்வைத்து விரல் நீட்டாமல், தனக்குள்ள அதிகாரத்தையும் சட்ட அமலாக்க அமைப்புகளையும் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்மல் வலியுறுத்தினார்.
“குற்றவாளிக்கு ஓர் இனம் இருக்கலாம்; ஆனால் குற்றத்திற்கு இனம் கிடையாது,” என அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.



