Latestஇந்தியா

கர்நாடகாவில் பயங்கரம்: கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட இளம் பெண்

பெங்களூரு, ஆகஸ்ட்-27- இந்தியா, பெங்களூரு, கர்நாடகாவில் 21 வயதுப் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு பின்னர் கிணற்றில் வீசப்பட்ட மிகவும் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அச்சம்பவம், கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹோக்ரானி கிராமத்தில் நிகழ்ந்தது.

இளங்கலை பட்டம் பெற்றிருந்த அஸ்வினி எனும் அப்பெண், வயலில் வேலை செய்து விட்டு மாலையில் தனது பெற்றோருடன் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த போது வயிற்று வலி ஏற்பட்டதால், அருகிலுள்ள அரசு நிலம் ஒன்றில் இயற்கை உபாதையைக் கழிக்க தண்ணீர் பாத்திரத்துடன் வெளியேறியுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அஸ்வினியைத் தேடிச் சென்ற அவரது தாயார், செருப்புகளையும் தண்ணீர் பாத்திரத்தையும் கண்டெடுத்துள்ளார்.

பின்னர் அக்குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடுதல் பணியைத் தொடர்ந்தனர். மறுநாள் காலை கிணறு ஒன்றில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட தகவல் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த குடும்பத்தினர், அந்த உடல் அஸ்வினியுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தினர். ஆடைகள் ஏதுமின்றி குப்புறக் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அஸ்வினியின் முகத்தில் காயங்கள் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவரது தந்தை காவல் துறையில் புகார் கொடுத்தார்.

விசாரணையை முடுக்கி விட்ட காவல் துறையினர், அஸ்வினியின் கிராமத்தைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்து அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்தனர். சந்தேக நபர்களில் ஒருவர் அக்குற்றத்தில் தமக்குத் தொடர்பிருப்பதை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார். அக்கொடூரச் சம்பவம் நிகழ்வதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் அஸ்வினிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகத் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!