
7 நாட்களில் 12 மலைகள் என்ற குறிக்கோளுடன் தனது சொந்த சாதனையை முறியடிக்க வேட்கையோடு களமிறங்கியுள்ள மலையேற்ற வீரர் லோகசந்திரன் ராமசந்திரனின் பயணம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
நாட்டின் 69ஆவது சுதந்திர தினத்தையொட்டி அவரது இலட்சியப் பயணம் நேற்று முன்தினம் ஜோகூரில் தொடங்கியது.
இன்று காலை லோகச்சந்திரன் மலேசியா சாதனைப் புத்தகப் பயணத்தின் ஒரு பகுதியாக, Bukit Darah தேசிய வகை தமிழ்ப்பள்ளியின் 157 மாணவர்களுடன் இணைந்து சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

அந்நிகழ்ச்சி தமது அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கவும் கிடைத்த அரிய வாய்ப்பு அதுவெனக் கூறினார்.
ஒவ்வொரு தனிமனிதரின் தேசபக்தி பள்ளிகளிலேயே தொடங்குவதாகத் தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார். அப்பள்ளியின் நிர்வாகத்திற்கும் கோலசந்திரன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
நேற்று நெகிரி செம்பிலானில் தனது பயணத்தை முடித்த லோகசந்திரன், இன்று சிலாங்கூரில் Gunung Hitam மலையை ஆக்கிரமிக்க சவாலைச் சுமந்து புறப்பட்டுள்ளார்.
இரு கால்களிலும் கடுமையான தசைப்பிடிப்பால் அவதியுற்றாலும், மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டுக் கொண்ட அவர், தற்போது நலமாக இருக்கிறார். அவரது இன்றைய பயணம் காலை 11.52 மணிக்குத் தொடங்கியது. அப்பயணம் முடிவடைய ஏழு மணி நேரம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மலையேற்றத்தில் Hemaraj, Tharunn மற்றும் Arif ஆகியோரும் லோகசந்திரனுடன் இணைந்து பயணித்து வருகின்றனர்.

பயணம் தொடர்கிறது — எல்லைகளை மறுவரையறை செய்தல் என்ற உத்வேகத்தை மனதில் ஏற்றி தனது சாதனைப் பயணத்தைத் தொடரும் லோகசந்திரனின் அடுத்தக் கட்டச் சவால்களைத் தெரிந்து கொள்ள வணக்கம் மலேசியாவைப் பின்தொடருங்கள்.



