
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – ஜப்பானின் டோக்கியோவிலிருந்து இன்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA டெர்மினல் 2-க்கு வந்த விமானத்தின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
காலை 6.30 மணியளவில் விமானம் தரையிறங்கிய பின்னர், 6.55 மணியளவில் பராமரிப்புப் பணியாளர்கள் சக்கரப் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை கவனித்தனர். பகுதியைத் திறந்து பார்த்தபோது வெள்ளைச் சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்த நிலையில் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், தடயவியல் குழுவும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
சுமார் 20 வயதுடையவர் என நம்பப்படும் அந்த நபர், 72 மணி நேரத்திற்கும் மேலாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்திலிருந்து அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் பாலினம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.



