
கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 7 நாட்களில் 12 மலைகளை ஏறும் சாதனைப் பயணத்தை மேற்கொண்டு வரும் மலையேற்ற வீரர் லோகசந்திரன் ராமசந்திரனின் சவால்மிக்க பயணம் இன்று 7-ஆவது மற்றும் இறுதி நாளை எட்டியுள்ளது.
நேற்று மாலை 6.10 மணிக்கு கெடாவில் உள்ள Gunung Jerai மலையேற்றத்தைத் தொடங்கிய லோகசந்திரன், இரவு நேரப் பயணம், உடல் சோர்வு மற்றும் கடினமான மலைப்பாதை உள்ளிட்ட பல்வேறு சவால்களைக் கடந்து, இரவு 10.26 மணிக்கு வெற்றிகரமாக மலையின் உச்சியை அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை Gunung Kerunai மலையை நோக்கிப் பயணித்த அவர், காலை 9.50 மணிக்கு தனது மலையேற்றத்தைத் தொடங்கினார்.
நாட்டின் சுதந்திர தினமான இன்று நடைபெற்ற இந்த மலையேற்றத்தில், லோகசந்திரனுக்கு ஆதரவாக 23 பேர் அவருடன் இணைந்து மலையேறினர்.
அவர்களின் பங்கேற்பு இன்றைய பயணத்தை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றியதாகக் குறிப்பிட்ட லோகசந்திரன், தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு சவால்களைக் கடந்து பயணித்த அவர், நண்பகல் 12.58 மணிக்கு Gunung Kerunai மலையின் உச்சியை வெற்றிகரமாக அடைந்தார்.
இதையடுத்து மலையடிவாரத்திற்குத் திரும்பும் லோகசந்திரன், மருத்துவப் பரிசோதனைக்காக கிளினிக்கிற்குச் செல்லவுள்ளார். பின்னர் இன்று மாலை பஹாங்கில் உள்ள Gunung Siku மற்றும் Gunung Ruil ஆகிய மலைகளை ஏறும் தனது அடுத்தக்கட்டப் பயணத்தைத் தொடரவுள்ளார்.
இந்தச் சாதனை முயற்சியை நிறைவு செய்வதற்கு நாளை காலை வரை அதிகாரப்பூர்வமாக கால அவகாசம் இருந்தபோதிலும், நாட்டின் சுதந்திர தினமான இன்றே எஞ்சிய மலைகளையும் ஏறி தனது சாதனைப் பயணத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட இலக்கு என லோகசந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குச் சிறப்புமிக்க இந்த நாளில் தனது சவால்மிக்க பயணத்தை நிறைவு செய்வது தமக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் எனக் கூறிய அவர், இறுதி மலை உச்சியை அடையும் வரை பாதுகாப்பாகவும் முழு முனைப்புடனும் தனது பயணத்தைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்தார்.
7 நாட்கள், 12 மலைகள் என்ற இலக்குடன் தொடங்கிய லோகசந்திரனின் சாதனைப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் அடுத்தக்கட்ட தகவல்களை வணக்கம் மலேசியா தொடர்ந்து உங்களுக்குக் கொண்டு வரும்.



