
சுங்கை சீப்புட், செப்-02- பேராக், Enggor பகுதியில் உள்ள விக்டோரியா பாலத்தில் மூன்று வயது சிறுவன் ஐந்து மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம், 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையைப் பராமரிப்பதில் அலட்சியமாகச் செயல்படுவது மீதான அச்சட்டத்தின் பிரிவு 31(1)-ன் கீழ் மேற்கொள்ளப்படும் அவ்விசாரணைக்காக, சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலக் காவல் துறைத் தலைவர் Datuk Mohd Alwi Zainal Abidin தெரிவித்தார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அத்தகையக் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அச்சிறுவன் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஓர் இடுக்கில் கால் வழுக்கி கீழே விழுந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
திடீர் மரணம் என்ற விசாரணைக்கு அப்பால், 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)-ன் கீழும் விசாரணை அறிக்கை தொடர்ந்து திறந்தே வைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் விசாரணையிலேயே இருப்பதாக Mohd Alwi குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை இரவு 7.40 மணிக்கு பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான விக்டோரியா பாலத்தில் ஐந்து மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த 3 வயதான Abdul Rafee Abdul Halim எனும் சிறுவன் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உயிரிழந்ததாக ஊடகங்கள் இதற்கு முன் செய்தி வெளியிட்டிருந்தன. அத்துயரச் சம்பவத்தை அடுத்து அப்பாலத்தின் இரும்பு அமைப்புப் பகுதி மூடப்பட்டுள்ளது. அப்பாலத்தின் தண்டவாளப் பாதையில் உள்ள மரத்தாலான தளத்தை மாற்றியமைக்கும் பணிகளுக்காக அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.



