Latestமலேசியா

மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டில் இந்தியக் கலை, கலாச்சாரத்தை முன்னிறுத்தும் ‘கொண்டாட்டம் SRFA 2026’

கோலாலம்பூர், செப்.02- மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டிலான ‘Festival Budaya Malaysia 2026’ இன் ஒரு பகுதியாக, இந்தியக் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் ஆறு நாள் விழாவாக ‘கொண்டாடம் SRFA 2026’ நடைபெறவுள்ளது.

அந்நிகழ்வு இம்மாதம் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கோலாலம்பூர், Taman Tasik Titiwangsaவில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறுகிறது. செவ்வியல் மற்றும் நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரிய இசை, சமையல் பாரம்பரியம், கலாச்சாரப் போட்டிகள், கண்காட்சிகள், பயிலரங்குகள், ஃபேஷன் நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவ்விழாவில் இடம் பெறவிருக்கின்றன.

விழாவின் சிறப்பம்சங்களாக ஆசியான் மற்றும் ஆசியா சாதனை முயற்சிகளுக்கான இரு சாதனை நிகழ்வுகளும், முழுமையாக நிதி ஆதரவு வழங்கப்படும் ‘நம்ம நாட்டு கல்யாணம்’ நிகழ்ச்சியும் அமைகின்றன.

அத்துடன், பிரம்மாண்டமான கலாச்சார அணிவகுப்புகள், பாரம்பரிய அனுபவங்கள், நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிறப்புச் சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘புடவை இரவு’, ‘வேஷ்டி இரவு’, ‘விளக்கேற்றும் இரவு’ மற்றும் ‘சிலம்பம் செயல்விளக்கம்’ ஆகிய நான்கு நிகழ்ச்சிகளுக்கு PAJSK மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

கலைஞர்கள், மாணவர்கள், கலாச்சார வல்லுநர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரை ஒரே தளத்தில் இணைப்பதே இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, பாரம்பரியக் கலைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை இன்றைய தலைமுறையினருக்கு எளிதான வகையில் அறிமுகப்படுத்துவதுடன், தலைமுறைகளுக்கு இடையிலான கலாச்சாரப் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் தளமாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழாவை முன்னெடுக்கும் Pertubuhan Kesenian dan Kebudayaan SRFA (PKKSRFA), மலேசிய சங்கப் பதிவிலாகாவில் 2020 ஜூலை மாதம் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கற்ற ஒரு சுயேட்சை அமைப்பாகும். கலை மற்றும் கலாச்சாரம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இவ்வமைப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு, கலைக் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூக வலுவூட்டல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. கலை நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், திருவிழாக்கள், சமூக முன்னெடுப்புகள் மூலம் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், B40 சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களையும் இது ஒன்றிணைத்து வருகிறது.

                                                                         

கலை மற்றும் கலாச்சாரத் துறையில் SRFA-வின் பங்களிப்பு ‘Malaysia Book of Records’ மற்றும் ‘Asia Book of Records’ ஆகிய சாதனைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், ‘கொண்டாடும் SRFA 2026’ இந்தியக் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதோடு, மலேசியாவின் பல்கலாச்சார சமூகத்தில் ஒற்றுமையையும் தலைமுறைத் தொடர்பையும் வலுப்படுத்தும் முக்கியப் பண்பாட்டு விழாவாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!