
ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாட பணம் தர மறுத்த மனைவியைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் 35 வயதான ஆடவர் ஒருவர் மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
ஜோகூர் பத்து பஹாட் ரெங்கிட் பகுதியிலுள்ள வீட்டில் கடந்த 31ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தேக நபர், மனைவியின் தலையில் பலமுறை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவரின் கோபமான நடவடிக்கை மற்றும் அடிக்கடி தாக்கும் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண், சம்பவம் நடந்த அன்று ரெங்கிட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சந்தேக நபரை அவரது வீட்டில் கைது செய்தனர்.
மனைவியை காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அவரை, விசாரணையை முடிக்க மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



