
சிரம்பான், செப்-03-நெகிரி செம்பிலான், மம்பாவ், கம்போங் காயு ஆரா அருகே விலங்குகளின் உள் உறுப்புகளைப் பதப்படுத்தி மீன்களுக்கான உணவைத் தயாரித்து வந்த வளாகமொன்றை சிரம்பான் மாநகர் மன்ற (MBS) அதிகாரிகள் சோதனை செய்து சீல் வைத்தனர். அவ்வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கையால் அருகில் உள்ள சிற்றோடையில் துர்நாற்றம் வீசும் திரவக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு நீர் மாசடைந்தது கண்டறியப்பட்டது. அப்பகுதி மக்கள் ஆற்றில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அளித்த புகாரைத் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டதாக MBS மேயர் Datuk Masri Baharuddin தெரிவித்தார்.
துர்நாற்றத்திற்கு சம்பந்தப்பட்ட வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த செயல்பாடுகள்தான் காரணம் என்பது தெரிய வந்தது. அவ்வளாகத்தில் உள்ளூர் நபருக்குச் சொந்தமானது என்பதும் அகதிகளுக்கான UNHCR அட்டைகளை வைத்திருந்த இரு மியன்மார் நாட்டவர்கள் அங்கு வேலை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது. சோதனையின் போது உரிமையாளர் அங்கு இல்லை. பணியாளர்கள் அருகிலுள்ள சிற்றோடையில் திரவக் கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டதுடன், பதப்படுத்தும் வேலைக்காக பயன்படுத்தப்பட்ட சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அப்பகுதியில் நாடா பொருத்தப்பட்டது.
அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவ்வளாகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதும், வெளிநாட்டு தொழிலாளர்கள் அங்கு இல்லாததும் உறுதி செய்யப்பட்டது. சோதனை நடவடிக்கையில் சுற்றுச்சூழல் துறையின் தடயவியல் பிரிவு, குடிநுழைவுத் துறை ஆகியவையும் உதவியதாக Masri குறிப்பிட்டார்.



