Latestமலேசியா

UNHCR அட்டை இருந்தாலும் வேலை செய்ய பெர்மிட் தேவை – குடிநுழைவு இலாகா எச்சரிக்கை

புத்ராஜெயா, செப்டம்பர்-8,ஐநா அகதிகள் அமைப்பின் UNHCR அட்டை வைத்திருக்கும் மியன்மார் நாட்டு அகதிகள், தகுந்த பெர்மிட் இன்றி வேலை செய்தால் அவர்கள் மீது குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மலேசியக் குடிநுழைவு இலாகா அவ்வாறு எச்சரித்துள்ளது.

​சட்டப்பூர்வ பயணப் பத்திரங்கள் இல்லாமல் இருப்பது மற்றும் குறிப்பிட்ட காலத்தை விட அதிகமாகத் தங்கியிருப்பது ஆகிய இரண்டு குற்றங்களுக்கு மட்டுமே, UNHCR அட்டைதாரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் தலைமை இயக்குநர் Zakaria Shaaban தெரிவித்தார்.

எனவே, பெர்மிட் அனுமதியின்றி வேலை செய்யும் அகதிகள் சட்டவிரோதக் குடியேறிகளாகவே கருதப்படுவார்கள் என்றார் அவர்.

​அதே சமயம், முறையான அனுமதியின்றி அகதிகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

UNHCR அட்டை வைத்திருப்பவர்கள் மீது குடிநுழைவு இலாகா நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், அவர்கள் அதன் அதிகார வரம்புக்கு உட்பட்டவர்கள் அல்ல என்றும் வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பில் Zakaria கருத்துரைத்தார்.

மலேசியாவில் உள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை Refugee Registration Documentation Programme எனப்படும் அகதிகள் பதிவு ஆவணத் திட்டத்தின் கீழ் பதிவுச் செய்யும் பொறுப்பு உள்துறை அமைச்சுக்கும் குடிநுழைவு இலாகாவுக்கும் உள்ளது என்றார்.

நாட்டில் உள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த மேலும் விரிவான மற்றும் முழுமையான தரவுகளை அரசாங்கம் பெறுவதற்கு வழிவகுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!