
கோலாலம்பூர், செப்டம்பர்-10,பிரிட்டிஷ் காலனித்துவ காலச் சட்டங்கள், மலேசியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்திற்குத் தடையாக இருப்பதாகவும், எனவே அவை முழுமையாக அகற்றப்பட வேண்டும் எனவும் பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வலியுறுத்தியுள்ளார்.
ஷரியா நீதிமன்றங்களின் தண்டனை அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் 1965-ஆம் ஆண்டின் 355-ஆம் சட்ட மசோதா மற்றும் சிவில் சட்டங்களை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இத்தகையச் சட்டங்கள் மலேசியாவின் முழுமையான சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக அவர் கூறிக் கொண்டார்.
கூட்டரசு அரசியலமைப்பின் கீழ், இஸ்லாத்தை வெறும் மதச் சடங்காக மட்டும் பார்க்காமல், சட்டம் மற்றும் அரசியல் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்க நெறியாக விரிவாகப் பொருள் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், DAP மதச்சார்பற்ற கொள்கையை முன்வைப்பதாக விமர்சித்த அவர், நாட்டின் சட்ட அமைப்பில் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



