Latestமலேசியா

நேப்பாள மீட்புப் பணிகளை நிறைவு செய்து ‘ஸ்மார்ட்’ குழுவினர் இன்றோ நாளையோ தாயகம் திரும்புவர்: தோக் மாட் தகவல்

நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்ட மலேசியச் சிறப்பு மீட்புக் குழுவினர் (SMART) இன்றோ அல்லது நாளையோ தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் உறுதிப்படுத்தினார்.

உயர் திறன் கொண்ட ட்ரோன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நேப்பாள அதிகாரிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள மலேசியர்களைக் கண்டறிவதிலும், தலைநகர் காட்மண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்துடன் இணைந்து நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதிலும் இக்குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டனர்.

சவாலான சூழ்நிலையிலும் திறம்படப் பணியாற்றிய ‘ஸ்மார்ட்’ குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு மலேசிய அரசாங்கம் சார்பில் தோக் மாட் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

எனினும், இன்னமும் 5,000 பேரைக் காணவில்லை என்பதால், சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை நிறுத்த நேப்பாள அரசுக்கு உடனடித் திட்டம் எதுவும் இல்லை என்றும் தோக் மாட் சொன்னார்.

முன்னதாக, நேப்பாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக போதேகோஷி ஆற்றுப் படுகையில் ஏற்பட்ட இந்த திடீர் பெருவெள்ளத்தில் குறைந்தது 1,400 பேர் பலியாயினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!