
ஜோகூர் பாரு, செப்-14-கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஷமேதா கிருஷ்ணாவின் மருத்துவ மறுவாழ்வுக்காக ஜோகூர் பாருவில் நடைபெற்ற ‘Symphony of Hope 2026’ நிதி திரட்டல் இசை விருந்து நிகழ்வு மூலம் 80,000 ரிங்கிட் நிதி திரட்டப்பட்டுள்ளது. ஷமேதா தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது சிகிச்சைக்காக மொத்தம் RM1.8 லட்சம் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி Nova Grand Hall அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் பொதுமக்கள், சமூக அமைப்பு மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பிரமுகர்கள் என பலர் திரளாகக் கலந்து கொண்டு ஆதரவளித்தனர்.
அந்நிகழ்வுக்கு ஆதரவளித்த சுல்தானா ரோகாயா அறக்கட்டளைத் தலைவர் Dato’ Sugumaran Raman தமது கருத்தை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.
இவ்வேளையில், ஸ்கூடாய் லயன்ஸ் குழு நேரடியாக தனது பங்களிப்பாக 20,000 ரிங்கிட் நன்கொடை வழங்கியது. அதோடு, மீதமுள்ள 1 லட்சம் ரிங்கிட்டைத் திரட்டவும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஷமேதாவின் கல்வி மற்றும் ஆரோக்கியப் பயணத்திற்கு ஆதரவளிக்கவும் திட்டமிட்டிருப்பதாக ஸ்கூடாய் லயன்ஸ் குழுத் தலைவர் லயன் தியாவசுந்தரி ஆறுமுகம் தெரிவித்தார்.
‘அறம் செய விரும்பு’ என்ற மனிதநேயச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்வு, தமது மகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்கும் வகையில் அமைந்ததாக ஷமேதாவின் தந்தை குறிப்பிட்டார்.
அந்நிகழ்வுக்கு ’வணக்கம் மலேசியா’ வியூகப் பங்காளியாகவும், மக்கள் ஓசை, House of Neelavaanam, Rajeev Kumar Productions உள்ளிட்ட அமைப்புகள் ஊடக மற்றும் சமூகப் பங்காளிகளாகவும் இணைந்தன.
மேலதிக சிகிச்சைக்காக எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் தேதி ஷமேதா இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறார். அங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கான செலவுகளைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.
இதனிடையே ஷமேதாவின் சிகிச்சைக்கு மேலும் நன்கொடை வழங்க விரும்புவோர் Lions Club of Skudai, Public Bank Berhad, கணக்கு எண்: 3132056805 என்ற வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதி அனுப்பலாம்.



