
குவாந்தான், செப்.14 – தடைகளை நீக்கி, நல்வழி காட்டும் முதற்கடவுளாகப் போற்றப்படும் விநாயகப் பெருமானுக்குரிய விநாயகர் சதுர்த்தி இன்று பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பகாங், குவாந்தான் பஞ்சிங்கில் அமைந்துள்ள கோலா ரெமான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலும் 102ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியம் கொண்ட இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகர், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க திருவுருவமாக விளங்குகிறார்.
இதனிடையே, இன்றைய சிறப்பு வழிபாட்டில் சுமார் 250 பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர்.
பத்து நாட்கள் நடைபெறும் மகோற்சவத்தின் முக்கிய நாளான இன்று, அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கி, 108 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அருகிலுள்ள முனீஸ்வரர் ஆலயத்திலிருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு, கோலா ரெமான் தோட்டத் தமிழ்ப்பள்ளி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. அப்போது பள்ளி மாணவர்களும் விநாயகப் பெருமானை வழிபட்டனர்.
பின்னர் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், கும்ப தீர்த்த அபிஷேகம் நடத்தப்பட்டு, ராஜ அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் இடம்பெற்றன.
இன்றிரவு சர்வ அலங்காரத்தில் விநாயகப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி, பஞ்சிங் பகுதி முழுவதும் பவனி வரவுள்ளார்.
இந்த ஆலயத்தின் வழிபாட்டு வரலாறு கோலா ரெமான் தோட்டம் மற்றும் பஞ்சிங் பகுதிகளில் வாழ்ந்த இந்திய சமூகத்தினருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் முனீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட விநாயகப் பெருமானுக்கு, பக்தர்களின் முயற்சியால் 1980ஆம் ஆண்டு தனி ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
காலப்போக்கில் இப்பகுதியின் தோட்டச் சூழல் மாறியபோதிலும், தலைமுறைகளைக் கடந்து ஆலயத்தின் வழிபாட்டு மரபும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.



