
அலோர் காஜா, செப்-15-மலாக்கா, Machap Baruவில் Durian Tunggal அணைக்கட்டுக்கு அருகிலுள்ள ஒதுக்குப்புறப் பகுதியில், சிமெண்ட் பூசப்பட்ட நீல நிற உருளைக் கலனில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் பிரேதப் பரிசோதனையில், உருளைக் கலனில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடும் மண்டை ஓடும் மனிதருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அலோர் காஜா மாவட்ட காவல் துறைத் தலைவர் Superintendan Ahmad Abu Bakar தெரிவித்தார். அக்கலனில் துணி, சட்டை, கால்சட்டை ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன.
எனினும், இறந்தவரின் பாலினம் மற்றும் இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பிரேதப் பரிசோதனையின் மூலம் கூடுதல் தகவல்களுக்காக காவல் துறை காத்திருப்பதாகவும், அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 முதல் 35 வயதுக்குட்பட்ட மூவர் நீல நிற உருளைக் கலனைக் கண்டு சந்தேகமடைந்ததைத் தொடர்ந்து, அதன் மேற்பகுதியின் ஒரு பகுதியை வெட்டிப் பார்த்ததாக முன்னதாக சமூக ஊடங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனுள் மனித எலும்புகள் போன்றவற்றைக் கண்ட அவர்கள், உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
உருளைக் கலனின் மேற்பகுதியில் சிமெண்ட் படிவுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதனுள் காணப்பட்டவை மூன்று வாரங்களாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எலும்புகளில் திசுக்கள் எதுவும் ஒட்டியிருக்கவில்லை எனவும் மண்டை ஓடு தனியாகக் கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.



