Latestமலேசியா

‘Bossku’ வீட்டுக்குத் திரும்புகிறார்; RM50 மில்லியன் நிபந்தனையுடன் எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க நஜிப்புக்கு அனுமதி

கோலாலம்பூர், செப்டம்பர் 18 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்குக்கு நிபந்தனையுடன் அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்த இந்த முடிவு, கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியத்தின் 64-வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இதன்படி, RM50 மில்லியன் அபராதத்தைச் செலுத்தும் நிபந்தனையுடன், நஜிப் 2028 ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் இருப்பார். வீட்டுக் காவல் தொடர்பான நிபந்தனைகளை மீறினால், இந்த நிபந்தனை மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார்.

வீட்டுக் காவலுக்கான பிற குறிப்பிட்ட நிபந்தனைகள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

SRC International நிறுவனத்திற்குச் சொந்தமான RM42 மில்லியன் நிதி முறைகேடு வழக்கில் அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அவருக்கு முதலில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் RM210 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. 2022 ஆகஸ்ட் 23-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் அவரது இறுதி மேல்முறையீட்டை நிராகரித்ததைத் தொடர்ந்து, அதே நாளில் அவர் காஜாங் சிறையில் தனது தண்டனையை அனுபவிக்கத் தொடங்கினார்.

2024-ஆம் ஆண்டு மன்னிப்பு வாரியத்தின் முடிவைத் தொடர்ந்து, அவரது 12 ஆண்டு சிறைத் தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதுடன், RM210 மில்லியன் அபராதமும் RM50 மில்லியனாகக் குறைக்கப்பட்டது.

நஜிப் தனது எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கப்படுவாரா என்பது நீண்ட காலமாக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

2024-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மன்னிப்புடன், நஜிப் எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் கூடுதல் அரச உத்தரவு இருப்பதாக நஜிப்பும் அவரது சட்டக் குழுவும் தொடர்ந்து கூறி வந்தனர். இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்று வந்த நிலையில், வீட்டுக் காவல் விவகாரம் தொடர்ந்து கவனம் பெற்றது.

இந்நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விவகாரத்தில் இன்று அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகியுள்ளது.

இதனிடையே, 1MDB தொடர்பான தனி வழக்கில் நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் RM11.38 பில்லியன் அபராதத்திற்கு எதிரான அவரது மேல்முறையீடு தனியாக நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!