
புத்ராஜெயா, செப். 18 – இளைஞர் சேவையில் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்து வரும் ஷமீரா நஸ்ரீன் அஹமத் நூர்தீனுக்கு (Shameera Nasreen Ahamed Noordeen) தற்போது தேசிய அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருதின் (Anugerah Perdana Belia Negara – APBN) தனிநபர் மகளிர் பிரிவில் 27 வயதான இவர் முதலிடம் பிடித்துள்ளார். இந்த அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய முஸ்லிம் பெண் தாம் எனவும் ஷமீரா தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 14ஆம் தேதி புத்ராஜெயாவில் நடைபெற்ற விருது விழாவில் அவருக்கு கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் 20,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு MIYC மூலம் தொடங்கிய இவரது இளைஞர் சேவை, இன்று அனைத்துலக அரங்குகளையும் எட்டியுள்ளது. UN ECOSOC Youth Forum, ASEAN Youth Dialogue உள்ளிட்ட தளங்களில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, தனது சமூகத்திற்கான பணியையும் இவர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். கடந்தாண்டு 600 இந்திய இளம் பெண்களை ஒன்றிணைத்த Konvensyen Beliawanis India Malaysia நிகழ்ச்சியை முன்னெடுத்தார். 30 இளம் இந்திய தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
இன்று கிடைத்துள்ள இந்த தேசிய அங்கீகாரத்தை தனது வெற்றியாக மட்டும் ஷமீரா பார்க்கவில்லை. குறிப்பாக இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்களும் தலைமைத்துவத்தில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்புகிறார்.
“எனக்குப் பிறகு வரும் அடுத்த பெண்ணுக்கான கதவை இந்த வெற்றி திறக்க வேண்டும். ஒருநாள் அவர் என்னைவிட மேலும் உயரத்திற்குச் செல்ல வேண்டும்,” என்பதே ஷமீராவின் விருப்பமாக உள்ளது.



