
பத்துமலை முருகன் சிலை தவறாகச் சித்தரிக்கப்பட்ட விவகாரத்தில், உணவு உற்பத்தி நிறுவனமான MAMEE பகிரங்க மன்னிப்புக் கோரியதோடு, சம்பந்தப்பட்ட _goodie bag_ பைகளையும் சந்தையிலிருந்து மீட்டுக் கொண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலக் கருப்பொருளைக் கொண்ட அந்தப் பையில், AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பத்துமலை முருகன் சிலையின் சித்திரம் இடம்பெற்றிருந்தது.
ஆனால், அதில் முருகப்பெருமானின் கையில் இருக்கும் புனிதமான வேலுக்குப் பதிலாக, திரிசூலம் போன்ற வடிவம் தவறாகச் சித்தரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையையும் இந்துக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்ட MAMEE நிர்வாகம், எந்தவொரு மதத்தையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை எனத் தெரிவித்து, இந்து மக்களிடம் முழு மனதுடன் மன்னிப்புக் கோரியது.
மேலும், அந்தப் பைகளை உடனடியாக விற்பனை மையங்களிலிருந்து திரும்பப் பெறும் நடவடிக்கைகளையும் அது தொடங்கியது.
இவ்வேளையில், Pierre Pang பத்து மலை வளாகத்திற்கும் நேரில் சென்று, அறங்காவலர் டத்தோ N. சிவகுமாரிடமும் வருத்தம் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட சிவகுமார், தவற்றைத் திருத்த MAMEE எடுத்த உடனடி நடவடிக்கையைப் பாராட்டினார்.
இவ்விவகாரத்தை தேவஸ்தானத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த பொது மக்களுக்கும் இவ்வேளையில் அவர் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, MAMEE நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Pierre Pang தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களை நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வ மன்னிப்புக் கடிதத்தை வழங்கினர்.
எதிர்காலத்தில் இந்து மதம் தொடர்பான விவகாரங்களில் விளம்பரங்களை உருவாக்கும்போது, தங்களின் வழிகாட்டலையும் ஆலோசனையையும் பெற வேண்டும் என, அதன்போது மலேசிய இந்து சங்கம் அந்நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.



