Latestமலேசியா

குருவிமலை ஸ்ரீ மகாகாளியம்மன், 7 கன்னிகள் ஆலயத்திற்கு 0.8 ஏக்கர் நிலம்; பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது!

தம்புன், செப்டம்பர் 22 – பல ஆண்டுகளாக நீடித்து வந்த குருவிமலை ஸ்ரீ மகாகாளியம்மன், ஏழு கன்னிகள் ஆலயத்தின் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு, ஆலயத்திற்கு 0.8 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது.

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசனின் தொடர் முயற்சியால் ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக ஆலயத் தலைவர் பாக்கியநாதன் ரங்கநாதன் தெரிவித்தார்.

80 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த ஆலயம், அப்பகுதியில் இந்தியர்கள் குவாரிகளில் பணியாற்றிய காலகட்டத்தில் அவர்களின் வழிபாட்டிற்காக உருவாக்கப்பட்டது.

                                   

1970ஆம் ஆண்டுகளில் அப்பகுதியில் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டபோது ஆலயம் மீண்டும் கட்டப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கான நிலத்தை அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாகப் பெற பலமுறை விண்ணப்பிக்கப்பட்டதாகவும் பாக்கியநாதன் கூறினார்.

எனினும், நிலத்திற்கான விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆலய நிர்வாகம் இப்பிரச்சினையை டத்தோ அ. சிவநேசனின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நில அலுவலக அதிகாரிகளுடன் சிவநேசன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அதிகாரிகளை நேரடியாக ஆலயத்திற்கு அழைத்துச் சென்று நிலைமையை ஆய்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டதாக பாக்கியநாதன் தெரிவித்தார்.

இந்தத் தொடர் முயற்சியின் பலனாக, தற்போது ஆலயத்திற்கு 0.8 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக நிலத்திற்காகப் போராடி வந்த ஆலய நிர்வாகத்திற்கும் பக்தர்களுக்கும் இது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பாக்கியநாதன், இப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தந்த டத்தோ அ. சிவநேசனுக்கு ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!