
கோலாலம்பூர், செப்.22 – நேபாள பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஸ்ரீ நாராயணி அறக்கட்டளையின் மலேசிய கிளை RM25,001 நிதியுதவி வழங்கியுள்ளது.
அறக்கட்டளையின் மலேசிய கிளை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து வழங்கிய இந்த நிதியை வெறுமனே ஒப்படைப்பதற்குப் பதிலாக, தாரா அறக்கட்டளையுடன் இணைந்து நேபாளத்திற்கே நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையைப் பார்வையிட்டு தேவைக்கேற்ப உதவிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாரா அறக்கட்டளை நிறுவனர் டத்தோ’ பர்தீப் குமார் குக்ரேஜா தலைமையிலான குழுவினர், அங்குள்ள உள்ளூர் அமைப்புகளைச் சந்தித்து வீடுகள், பள்ளிகள் மற்றும் அனாதை இல்லங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கட்டமைப்புகளை நீண்டகால அடிப்படையில் மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளையும் ஆராயவுள்ளனர்.
2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ நாராயணி அறக்கட்டளையின் மலேசிய கிளை, கொரோனா கால உதவிகள், இரத்த தான முகாம்கள், பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகநலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
மேலும், கோலாலம்பூர் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட உதவிகளையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்ரீ நாராயணி அறக்கட்டளையின் மலேசிய கிளை வழங்கிய RM25,001 நன்கொடையையும் சேர்த்து, நேபாள பேரிடர் நிவாரணத்திற்காக இதுவரை RM192,000 நிதி திரட்டப்பட்டுள்ளது.
RM200,000 இலக்கை எட்டும் நோக்கில் நிதி திரட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



