Latestமலேசியா

பிப்ரவரி – ஆகஸ்ட் வரை 101.66 மில்லியன் போலி அழைப்புகளைத் தடுத்த MCMC; மோசடிகளுக்கு எதிராக கண்காணிப்பு தீவிரம்

பொது மக்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் தீவிர நடவடிக்கையாக, கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, 101.66 மில்லியன் போலித் தொலைபேசி அழைப்புகளைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

​அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் எண்களைப் போன்றே போலியாக வடிவமைத்து பொது மக்களை ஏமாற்றும் கும்பல்களுக்கு எதிராக, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

அரசாங்கத்தைப் பொருத்தவரை, ​மோசடி கும்பல்களின் தொடர்புகளைத் துண்டிக்க தொழில்நுட்பக் கண்காணிப்புகளும் வடிகட்டும் அமைப்புகளும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றன;

என்றாலும், இதில் பொது மக்களின் விழிப்புணர்வே மிக முக்கிய அரணாகத் திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

அவ்வகையில், ​அடையாளம் தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளில் தங்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களையோ கடவுச்சொற்களையோ ஒருபோதும் பகிர வேண்டாம் என்றும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக 997 என்ற தேசிய மோசடி தடுப்பு மையத்தை (NSRC) தொடர்பு கொள்ளுமாறும் பொது மக்களைத் துணையமைச்சர் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!