
கோலாலம்பூர், செப்டம்பர்-28,நடப்பு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் ஒற்றுமை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு முடிவுக்கு வரும் என்றும், 16-ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனித்தே களம் காணும் என்றும் அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் கூட்டணி என்பது நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியும் வரை நாட்டை நிர்வகிப்பதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என துணைப் பிரதமருமான அவர் தெளிவுப்படுத்தினார்.
நாடாளுமன்றம் முறையாகக் கலைக்கப்பட்ட பிறகு, தேசிய முன்னணி தனது பாரம்பரிய சின்னமான தராசு சின்னத்தின் கீழ் சுயேச்சையான அரசியல் சக்தியாக நின்று மக்களிடம் புதிய ஆணையை நாடும் என்றார் அவர்.
அதே சமயம், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகே, நாட்டின் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு மற்ற கூட்டணிகளுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் பரிசீலிக்கப்படும் எனவும் சாஹிட் குறிப்பிட்டார்.
இதனிடையே, மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுப் பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்தியச் சமுதாயத்தின் உரிமைகளுக்காகவும் தேசிய முன்னணியின் வலிமைக்காகவும் அக்கட்சி ஆற்றி வரும் தொடர் பங்களிப்புகளுக்குத் தமது நெஞ்சார்ந்த பாராட்டைத் தெரிவித்தார்.
கஷ்ட நஷ்டங்கள் நிறைந்த காலக்கட்டங்களிலும் பாரிசானுடன் உறுதுணையாக நின்ற மக்கள் சக்தி கட்சியின் விசுவாசம் மதிக்கப்படும்.
அவ்வகையில், வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான தயார் நிலையில் அவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என சாஹிட் உறுதியளித்தார்.



