
சிரம்பான், செப்-30-நெகிரி செம்பிலான், Kuala Pilahவில் உள்ள பள்ளியொன்றின் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த 14 வயது மாணவர், இரு மூத்த மாணவர்களால் ரப்பர் குழாயால் தாக்கப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Muhammad Idlan Fareeq எனும் அம்மாணவர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அவர் உயிரிழந்து விட்டது அங்கு உறுதிச் செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் காவல் துறைத் தலைவர் Datuk Alzafny Ahmad தெரிவித்தார்.
சம்பவத்தின் போது அம்மாணவரை ரப்பர் குழாயை எடுத்து வருமாறு கட்டளையிட்ட அம்மூத்த மாணவர்கள், பின்னர் விடுதி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அம்மாணவர்கள் மோசமாகத் தாக்கியதில் அம்மாணவர் கீழே சரிந்து விழுந்துள்ளார்.
அம்மாணவரின் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பிரேதப் பரிசோதனை மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அச்சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 69 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மூத்த மாணவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்விருவரும் உயிரிழந்த மாணவருடன் அம்பெய்தும் குழுவில் உடன் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த மாணவர் வேப் புகைத்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரைத் தண்டிக்க அவ்விரு மூத்த மாணவர்களுன் கடுமையாகத் தாக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.



