
செப்பாங், அக் 3 -செப்பாங் அனைத்துலகப் பந்தயத் திடலில் நேற்று நடைபெற்ற F1 பயிற்சி அமர்வுகளுக்குப் பிறகு, அங்கிருந்து வெளியேற முடியாமல் ரசிகர்கள் பல மணி நேரம் காத்திருந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இலவசப் பேருந்துச் சேவையில் ஏற்பட்ட தாமதம் மற்றும் நீண்ட வரிசைகள் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிலர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததாகக் கூறியுள்ளனர்.
பேருந்துக்காகக் காத்திருந்த கூட்டம் சாலையில் திரண்டதால், பயணிகளை ஏற்றிய பேருந்துகள் வெளியேறுவதிலும், மற்ற பேருந்துகள் பயணிகளை ஏற்றும் பகுதிக்குள் நுழைவதிலும் சிரமம் ஏற்பட்டதாக நேரில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். வரிசைகளை ஒழுங்குபடுத்துவதிலும், ரசிகர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குவதிலும் குறைபாடுகள் இருந்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, பெரும்பாலான மின்னியல் வாடகைக் கார்களுக்கு பந்தயத் திடலில் நேரடியாகப் பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை. ரசிகர்கள் பேருந்துகள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட போக்குவரத்து மையங்களுக்குச் சென்ற பிறகே அந்தச் சேவைகளைப் பயன்படுத்த வேண்டியிருந்ததால், பேருந்துத் தாமதம் அவர்களின் பயணத்தை மேலும் பாதித்தது.
இன்றும் நாளையும் F1 போட்டிகள் தொடரவுள்ள நிலையில், பேருந்துச் சேவையும் கூட்ட மேலாண்மையும் மேம்படுத்தப்பட்டு, சிரமமின்றி போட்டிகளைக் கண்டு ரசித்துத் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.



