
துபாய், அக்டோபர்-4 – அண்மைய FlyDubai விமானச் சம்பவத்தின் போது காயமடைந்த இந்திய விமானி கேப்டன் Smit Machchar-ரை, துபாய் பட்டத்து இளவரசர் Sheikh Hamdan bin Mohammed Al Maktoum நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இந்தச் சந்திப்புக் குறித்த புகைப்படங்களைத் தமது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பகிர்ந்துள்ள இளவரசர், இக்கட்டான சூழலில் கேப்டன் Smit வெளிப்படுத்திய அசாத்திய துணிச்சலையும், மனித உயிர்களைக் காப்பதில் காட்டிய அர்ப்பணிப்பையும் மனதாரப் பாராட்டினார்.
செப்டம்பர் 30-ஆம் தேதி நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் cockpit அறைக்குள் கேப்டன் Smit மீது அவரது சக துணை விமானி திடீரெனத் தாக்குதல் நடத்தினார்.
இதில் படுகாயமடைந்த நிலையிலும், மன உறுதியோடு செயல்பட்ட கேப்டன் Smit, cockpit கதவைத் திறந்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளே வர வழிவகுத்தார்.
உடனடியாக உள்ளே நுழைந்த அவர்கள் தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப் பிடித்தனர்.
இந்த மோதலின் போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் ஆபத்தான முறையில் கீழே இறங்கியது.
எனினும், விமானத்திலிருந்த மாற்று விமானிகள் நிலைமையைச் சாதுரியமாகக் கையாண்டு விமானத்தைச் சவூதி அரேபியாவில் பத்திரமாகத் தரையிறக்கினர்.
இதையடுத்து, நாட்டின் தலைமைத்துவத்தின் சார்பில் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த இளவரசர் Hamdan, கேப்டன் Smit ஐக்கிய அரபு சிற்றரசின் மனிதநேயம் மற்றும் அமைதிக்கான அடையாளமாகத் திகழ்கிறார் என்றும், தேசத்தின் பெருமைமிகு கதைக்கு அவர் ஒரு முன்னுதாரணம் என்றும் புகழாரம் சூட்டினார்.
விபத்துத் தருணத்தில் பல உயிர்களைப் பாதுகாக்கத் துணிச்சலாகச் செயல்பட்ட கேப்டன் Smit-தின் செயல், தற்போது விமானப் போக்குவரத்துத் துறையிலும் இணையவாசிகளிடையேயும் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.



