
திரெங்கானு, அக்டோபர் 5 – குவாலா திரெங்கானுவில், வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான பெண்ணை நம்பி முதலீடு செய்த 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் 367,950 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
ஜூலை 31-ஆம் தேதி அறிமுகமான பெண், தவறுதலாக குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறி முதியவருடன் பழகியுள்ளார். பின்னர், அதிக லாபம் கிடைக்கும் முதலீட்டுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
முதல் மூன்று முதலீடுகளுக்கு பணம் திரும்பக் கிடைத்ததால், முதியவர் அந்தத் திட்டத்தை நம்பியுள்ளார். இதையடுத்து, ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 30 வரை 13 வங்கிக் கணக்குகளுக்கு 72 முறை பணம் செலுத்தி 367,950 ரிங்கிட்டை முதலீடு செய்துள்ளார்.
பின்னர், முதலீட்டுத் தொகையும் லாபமும் 800,000 ரிங்கிட்டுக்கும் அதிகமாக இருப்பதாகவும், பணத்தைத் திரும்பப் பெற மேலும் 80,765 ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சந்தேகமடைந்த முதியவர் அந்தப் பணத்தைச் செலுத்தவில்லை. இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



