
கோலாலம்பூர், அக்டோபர்-8 – லாவோஸ் நாட்டில் 521 கிலோ கிராம் Methamphetamine போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சிலாங்கூர் சுபாங் விமான நிலையத்தில் விமானி உட்பட நால்வர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், விமானி, துணை விமானி மற்றும் இரண்டு பெண் விமானப் பணியாளர்கள் கைதாகினர்.
அவர்கள் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவுக்குப் புறப்படத் தயாராக இருந்தபோது அதிகாரிகளிடம் சிக்கினர்.
இந்நிலையில், போதைப்பொருள் அடங்கிய பயணப் பெட்டிகள் தங்களது தனியார் விமானத்தில் ஏற்றப்படவே இல்லை என, சிங்கப்பூரைச் சேர்ந்த CGT Asia நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அக்டோபர் ஒன்றாம் தேதி, சுபாங்கிலிருந்து லாவோஸ் வழியாக மணிலா செல்லத் திட்டமிடப்பட்டிருந்த விமானத்தில், பிலிப்பின்ஸ் பயணி ஒருவர் பயணித்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது.
லாவோஸில் மின்னியல் சிகரெட் பொருட்கள் அடங்கிய பயணப் பெட்டிகளைப் பெற்றுக் கொள்ளவிருப்பதாக அந்தப் பயணி கூறியிருந்தார்.
ஆனால், சுமார் 23 பயணப் பெட்டிகள் இருப்பது தெரியவந்ததும், பாதுகாப்புக் காரணங்களால் அவற்றை விமானத்தில் ஏற்றப் பணியாளர்கள் மறுத்துவிட்டதாக அந்நிறுவனம் கூறியது.
பின்னர், லாவோஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 21 பெட்டிகளில் 521 கிலோ கிராம் Methamphetamine போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் மலேசியர் ஒருவர் உட்பட 13 பேர் லாவோஸில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் போதைப்பொருள் கடத்தலில் தங்களது நிறுவனத்திற்கோ விமானப் பணியாளர்களுக்கோ தெரிந்தே எந்தத் தொடர்பும் இல்லை என CGT Asia மறுத்துள்ளதோடு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.



