
கோத்தா கினபாலு, அக்-12–சபா, Inanamமில் K.K Taipan வளாகத்தின் முன், 23 வயதுடைய இளைஞரைத் தலைக்கவசங்களால் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அத்தாக்குதலில் அவ்விளைஞரின் மூக்கில் எலும்பு முறிவும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்களும் ஏற்பட்டன. அவர் தற்போது Queen Elizabeth மருத்துவமனை I-இல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விளைஞரின் தாயாரிடமிருந்து சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக கோத்தா கினபாலு மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Shahrudin Mat Husain தெரிவித்தார். ஐந்து பேர் கொண்ட கும்பல் தலைக்கவசங்களைப் பயன்படுத்தி அவரைத் தாக்கியிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 324 மற்றும் 148-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதே சமயம் விசாரணையைப் பாதிக்கக்கூடிய ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது. இளைஞர் தாக்கப்படும் சம்பவம் மீதான 33 வினாடி காணொளி முன்னதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.



