Latestமலேசியா

தவறான பயணத் தடை; பெண்ணுக்கு RM75,000 வழங்கியது அரசாங்கம்

கோலாலம்பூர், நவம்பர்-29,தவறுதலாக வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அரசாங்கம் 75,000 ரிங்கிட்டை வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தில் பதிவுச் செய்யப்பட்ட சமரசத் தீர்ப்பின் அடிப்படையில், 70,000 ரிங்கிட் இழப்பீடும், ஐயாயிரம் ரிங்கிட் வழக்குச் செலவுத் தொகையும் வழங்கப்பட்டதாக, அப்பெண்ணின் வழக்கறிஞர் எம். மனோகரன் தெரிவித்தார்.

45 வயதான எஸ். சுமதி, கடந்த 2022-ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்குச் செல்ல முயன்றபோது, குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவர் திவாலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்; இதனால் சுமதி பேரதிர்ச்சி அடைந்தார்.

வேறு வழியின்றி இதர 15 குடும்ப உறுப்பினர்களும் புது டெல்லிக்குப் புறப்பட்ட வேளை, சுமதி இங்கேயே இருக்க வேண்டியதாயிற்று.

உடனடியாக, திவால் துறையிடம் மேற்கொண்ட விசாரணையில், அதே பெயரையும் பிறந்த தேதியையும் கொண்ட மற்றொரு பெண்ணின் விவரங்களால் அந்தக் குழப்பம் ஏற்பட்டது தெரியவந்தது.

தவறை ஒப்புக்கொண்ட குடிநுழைவு இலாகா,சுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை நீக்கியது.

இதையடுத்து சுமதி மறுநாளே இந்தியா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும், அச்சம்பவத்தால் ஏற்பட்ட நிதி இழப்பு, மன உளைச்சல் மற்றும் அவமானத்தைத் தொடர்ந்து, சுமதி 2023-ஆம் ஆண்டு குடிநுழைவு இலாகா தலைமை இயக்குநருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக வழக்குத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வெளியாகி, சுமதியின் வங்கிக் கணக்கில் கடந்த திங்கட்கிழமை இழப்பீட்டுத் தொகை போடப்பட்டதாக வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!