
புத்ராஜெயா, அக்-12-Chery Omoda 5 ரகக் காரின் வாகன வகை அங்கீகாரத்தை சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது. அண்மையில் அக்காரினொ ஒரு பாகம் சாலையில் விழுந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டதைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட கார்களின் புதிய பதிவுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும். தொழில்நுட்ப விசாரணைகளை மேற்கொண்டு, சாத்தியமான பாதுகாப்பு அபாயங்களைக் கண்டறிவதே அதன் நோக்கமாகும் என JPJ தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.
பாதிப்புக்கு, வாய்ப்புள்ள மாடல்கள் மற்றும் வகைகளை அடையாளம் காண்பதுடன், பாக எண்கள், உற்பத்தித் தொகுதிகள், வாகன அடையாள எண்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகனங்களைக் கண்டறியுமாறு Chery Malaysia நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆபத்து இருப்பதாகக் கண்டறியப்படும் வாகனங்கள் பரிசோதனை மற்றும் தேவையான சீரமைப்பு நடவடிக்கைகளுக்காகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதோடு Chery Omoda 5 கார்களின் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மையங்கள், கார் பாகங்களை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் JPJ தொழில்நுட்பத் தணிக்கையை மேற்கொள்ளும். அதில் தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள், இணைப்புப் பரிசோதனை நடைமுறைகள், பயன்படுத்தப்படும் பாகங்களின் பாதுகாப்புத் தரநிலைகள் ஆகியவை ஆய்வு செய்யப்படும்.
சாலைப் பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு விஷயத்திலும் சமரசம் செய்து கொள்ளப்படாது. அக்கார்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே இடைநிறுத்தம் நீக்கப்படும் என்றும் Aedy குறிப்பிட்டார்.



