
ஷா ஆலாம், அக்-13–கடந்த வெள்ளிக்கிழமை Persiaran Mokhtar Dahari அருகே 11 வாகனங்கள் மீது மோதிய லாரி ஓட்டுநர் சி. அகிலன் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டி 58, 53, 17 மற்றும் 29 வயதுடைய நான்கு பேருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கியுள்ளார். எனினும் 51 வயது அகிலன் அக்குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம். அகிலனின் மாத வருமானம் 1,700 ரிங்கிட் என்பதையும், மனைவி மற்றும் 11 வயது குழந்தையைப் பராமரித்து வருவதையும் சுட்டிக் காட்டி, அவரது வழக்கறிஞர் குறைந்த பிணைத் தொகையைக் கோரினார்.
மேலும், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷா ஆலாம் மாவட்டக் காவல் தலைமையகத்தில் போதைப்பொருள் உட்கொண்டதாக 1952ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அகிலன் மீது மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. அவர் அதனையும் மறுத்தார். குற்றம் நிரூபனமானால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டுக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் 9,000 ரிங்கிட் பிணையும், போதைப்பொருள் உட்கொண்ட குற்றச்சாட்டுக்கு 3,900 ரிங்கிட் பிணையும் விதிக்கப்பட்டது. வழக்கு முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்விரு வழக்குகளும் டிசம்பர் 22 ஆம் தேதி மற்றும் 2027 ஜனவரி 11 ஆம் தேதியும் விசாரணைக்கு வருகிறது.



