
கோலா திரங்கானு, அக்-13–திரங்கானு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தமது வங்கிக் கணக்குகளிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் மூலம் 1.985 மில்லியன் ரிங்கிட் சேமிப்புத் தொகை காணாமல் போயிருப்பதகாக் கூறி இரண்டு வங்கிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் தமது கணக்குகளைச் சரிபார்த்தபோது, அவற்றில் முறையே 73 ரிங்கிட் மற்றும் 99 ரிங்கிட் மட்டுமே எஞ்சியிருந்ததைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக 65 வயது Tengku Ismail Tengku Ibrahim தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், பல கட்டங்களாகப் பணம் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தாம் சந்தேகிப்பதாக அவர் கூறினார். வங்கி ஊழியர்களிடம் விளக்கம் கேட்டும் திருப்திகரமான பதில் கிடைக்காததால், இரு வங்கிகளுக்கும் அதிகாரப்பூர்வ கடிதங்களை அனுப்ப வழக்கறிஞரை நியமித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், பணம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. பணப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய பெறுநர் கணக்குகளின் உரிமையாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்றாரவர்.
இவ்வேளையில், மொத்தம் 1,985,065 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். இரு வங்கிகளிடமும் விளக்கம் கோரியபோதும் திருப்திகரமான பதில் பெறப்படாததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். பணத்தை மீட்டெடுப்பதுடன், ஏற்பட்ட பிற இழப்புகளுக்கான இழப்பீட்டையும் கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவ்விவகாரம் தொடர்பாகக் காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இரு வங்கிகளுக்கும் எதிரான நீதிமன்ற அழைப்பாணைகள் அக்டோபர் 8ஆம் தேதி வழங்கப்பட்டன. வழக்கு நிர்வாக நடைமுறைகள் அக்டோபர் 14 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.



