Latestமலேசியா

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா RM901,680 நிதி ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, அக். 14 — நாடு முழுவதும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் 8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த, மித்ரா 2026ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழிப் பாடத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 901,680 ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.

மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, கல்வி அமைச்சுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இதன் மூலம் 7,897 எஸ்பிஎம் மாணவர்களும் 793 எஸ்டிபிஎம் மாணவர்களும் பயனடைவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாணவர்களின் தமிழ்மொழிப் பாடத் திறனை மேம்படுத்துதல், சிறந்த தேர்ச்சி பெற உதவுதல், தேர்வுகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான கல்விசார் ஆதரவை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மடானி அரசாங்கம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறினார்.

மாணவர்கள் தங்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மித்ரா வாயிலாகக் கல்வி உதவிகளை வழங்குவதுடன், மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்மொழி என்பது தேர்வுக்கான பாடம் மட்டுமல்ல; மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தின் முக்கிய அங்கம் என்பதால், எதிர்காலத் தலைமுறையினருக்காக அதனைப் பாதுகாத்து வளர்ப்பது அவசியம் என்றும் ரமணன் வலியுறுத்தினார்.

இதனிடையே, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிலாங்கூரைச் சேர்ந்த சுமார் 300 எஸ்பிஎம் மாணவர்கள் பங்கேற்ற தமிழ்மொழிப் பாடத் திறன் மேம்பாட்டுப் பட்டறை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மெனாரா பிஏசியின் ஹோரிசோன் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

ரமணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த இப்பட்டறையில், மாணவர்களின் தேர்வுத் தயார்நிலை, தன்னம்பிக்கை மற்றும் தமிழ்மொழிப் பாடத் திறனை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ, மனிதவள அமைச்சு மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் உள்ளிட்டோருடன் 50 கல்வியாளர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

‘கல்வி மடானி’ முன்னெடுப்பின் கீழ், கல்வி அமைச்சு, மாநிலக் கல்வித் துறைகள் மற்றும் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தவுள்ளதாக மித்ரா தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!