Latestமலேசியா

நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்; பதவி விலகக் கோரக்கூடாது – அன்வார்

கோலாலம்பூர், அக்டோபர் 14 – போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் போன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் பதவி விலகக் கோரக்கூடாது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

டாக்ஸி, வாடகைக் கார் ஓட்டுநர்கள் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறப்பு ‘H’ வாகனப் பதிவு எண்கள் விற்பனை மூலம் திரட்டப்பட்ட 91 மில்லியன் ரிங்கிட் நிதி, நாடு முழுவதுமுள்ள 38,000 டாக்ஸி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கும், 15,000 பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் வழங்கப்படுவதாக அன்வார் கூறினார்.

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டுக்காவலில் எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிக்கத் தொடங்கினால், தாம் பதவி விலகுவதாக லோக் ஏற்கெனவே கூறியிருந்தார். இதுகுறித்து கருத்துரைத்த அன்வார், நஜீப்பின் வீட்டுக்காவல் தொடர்பான முடிவு பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல என்றும், அது கூட்டரசு அரசியலமைப்பின்படி மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், நாட்டிற்குத் தேவை ஊழல் செய்பவர்கள் பதவி விலகுவதுதான் என்றும், கொள்கை உறுதியுடன் மக்கள் நலனுக்காகச் செயல்படும் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் பணியை ஆற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!