Latestமலேசியா

தேனிலவுக்காகத் தாய்லாந்து சென்ற மலேசியத் தம்பதியினர் காரில் 40 லிட்டர் பெட்ரோல்; விசாரணை நடத்தப்படுகிறது

கோத்தா பாரு, அக்-15-தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில், அனைத்துலக பண நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் மாநாட்டுப் பாதுகாப்பு மண்டலத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மலேசியத் தம்பதியினரின் காரில், சுமார் 40 லிட்டர் பெட்ரோலைக் கொண்டிருந்த ஏழு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

பேங்காக் பெருநகர நிர்வாகப் பணியாளர்கள் மேற்கொண்ட சோதனையின்போது, நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த மலேசியப் பதிவு எண் கொண்ட அந்தக் கார் கண்டறியப்பட்டது. பாதுகாப்பு மண்டலத்திற்கு அருகில் இருந்ததால், வாகனத்தில் அபாயகரமான பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு அகற்றும் பிரிவு அதிகாரிகள் காரைச் சோதனையிட்டதில் பெட்ரோல் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொடர் விசாரணையில், அந்த வாகனம் அக்டோபர் 11ஆம் தேதி தாய்லாந்திற்குள் நுழைந்து, அக்டோபர் 17ஆம் தேதி மலேசியா திரும்பத் திட்டமிட்டிருந்த தம்பதியினருக்குச் சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தேனிலவைக் கொண்டாட, தங்களது சொந்தக் காரில் தாய்லாந்தின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்வதாக அத்தம்பதியர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தாய்லாந்தின் சாலைகள் பழக்கமில்லாததாலும், நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என எதிர்பார்த்ததாலும் முன்னெச்சரிக்கையாகப் பெட்ரோலை எடுத்துச் சென்றதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். வழியில் பெட்ரோல் நிலையங்களைக் கண்டறிய சிரமம் ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக, மலேசியாவிலேயே அந்த எரிபொருளை வாங்கியதாகவும் அவர்கள் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

இவ்வேளையில், காரில் இருந்தவர்களின் அடையாளம், அவர்களின் நடமாட்டம் மற்றும் கூடுதல் பெட்ரோலை எடுத்துச் சென்றதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!