
உலு சிலாங்கூர், அக்-21-Sungai Choh, Sari Alamanda பகுதியில் செயல்பட்டு வந்த உணவகமொன்றில் கரப்பான் பூச்சிகள் அதிகளவில் காணப்பட்டதை அடுத்து அந்த உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட உணவகத்தில் சுகாதாரமின்மையான விஷயங்களையும் Hulu Selangor நகராண்மைக் கழகம் கண்டறிந்தது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சமையல் உபகரணங்கள் அசுத்தமாக இருந்ததுடன், சமையலறைத் தரையில் நீரும் உணவுக் கழிவுகளும் தேங்கியிருந்தன. உணவுப் பொருட்கள் சேமிக்கும் இடங்களும் தூசு படிந்து, ஒழுங்கற்ற நிலையில் இருந்ததாக MPHS தெரிவித்தது.
அதோடு கொழுப்பு மற்றும் உணவுக் கழிவுகளை அகற்றும் அமைப்புகள், புகை மற்றும் வெப்பத்தை வெளியேற்றும் வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. கழிவறைகள் அசுத்தமாக இருந்ததுடன், கழுவப்படாத முட்டைகள், முட்டை அட்டைகள் மற்றும் மூடப்படாத குப்பைத் தொட்டிகளும் கண்டறியப்பட்டன.
அந்த விதிமீறல்களை அடுத்து, உணவக உரிம விதிகளின்கீழ் ஆறு அபராத அறிவிக்கைகளும், அமலாக்கத் துறை மூலம் மேலும் இரண்டு அபராத அறிவிப்புகளும் வழங்கப்பட்டன. உணவக உரிமையாளர் 14 நாட்களுக்குள் உரிய சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.



