
கோலாலம்பூர், அக்டோபர்-23,பாலியல் தொழில் மற்றும் சிறார்களைக் கடத்தி பாலியல் ரீதியாக வேட்டையாடுவதன் மூலம், ஆண்டுக்கு 5.4 மில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டி வந்ததாக நம்பப்படும் ‘Geng Yunaa’ கும்பலைப் போலீஸார் முறியடித்துள்ளனர்.
2024-ஆம் ஆண்டு முதல், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் இக்கும்பல் செயல்பட்டு வந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
உள்நாட்டினர், வெளிநாட்டினர் மற்றும் வயதுக்குட்பட்ட சிறார்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இக்கும்பல் சந்தேகிக்கப்படுகிறது.
டெலிகிராம் செயலி மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த இக்கும்பல், தலைக்கு 200 முதல் 350 ரிங்கிட் வரை கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
நாளொன்றுக்கு சுமார் 100 வாடிக்கையாளர்கள் மூலம் 15 ஆயிரம் ரிங்கிட் வருமானமும், மாதத்திற்கு 450,000 ரிங்கிட்டும் ஈட்டியதாகப் போலீஸார் மதிப்பிட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 24 முதல் 26-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ‘Op Angel’ நடவடிக்கையில், 18 முதல் 44 வயதுடைய 7 சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
மேலும் இருவர் ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
இக்கும்பலுடன் தொடர்புடைய 17 பாலியல் தொழில் மற்றும் சிறார் கடத்தல் வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ள வேளை, இக்கும்பலைச் சேர்ந்த 9 பேர் இன்று பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.



