
புத்ராஜெயா, அக்டோபர்-23,பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கான 1,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி முறையாக வழங்கப்படுவதை உறுதிச் செய்ய, பேருந்து உரிமையாளர்களும் நடத்துநர்களும் தங்களது ஓட்டுநர்களின் விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனமான APAD இதனை நினைவுறுத்தியுள்ளது.
2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த ஒருமுறை நிதியுதவி, தீபாவளிக்கு முன்னதாகத் தகுதியான ஓட்டுநர்களைச் சென்றடைவதை உறுதிச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக APAD கூறியது.
இதற்காக, ஓட்டுநர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், PSV உரிமம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பதிவு நடவடிக்கை, அக்டோபர் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படலாம் என APAD-யின் முந்தைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அதிகாரப்பூர்வ உதவித் திட்ட இணையதளத்தில் பதிவு செய்வதற்கான இறுதி நாள் அக்டோபர் 27 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தகுதியான ஓட்டுநர்களுக்கான நிதியுதவி நேற்று அக்டோபர் 22-ஆம் தேதி முதல் கட்டங்கட்டமாக வழங்கப்படுவதாக APAD தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 53,000 டேக்ஸி, வாடகைக் கார் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் இந்த ஆயிரம் ரிங்கிட் உதவியால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



